செவ்வாய், 28 மே, 2013

காணாததை கனவில் கண்டதாக பொய் சொல்வது தீமையும், பெரும் பாவமுமாகும்.



ஏகஇறைவனின் திருப்பெயரால்....

إِنَّ اللّهَ لاَ يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَن يَشَاء وَمَن يُشْرِكْ بِاللّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا {48}

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். திருக்குர்ஆன். 4:48.



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பொய் பேசுவது, பொய் சத்தியம் செய்வது, பொய் சொல்லி வியாபாரம் செய்வது போன்ற மோசடிகள் இம்மை – மறுமை வாழ்வுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தக்கூடியவைகள் கூடியவைகள் என்பதை கடந்தக் கட்டுரையில் அறிந்தோம்.

காணாததை கனவில் கண்டதாக பொய் சொல்வது தீமையும், பெரும் பாவமுமாகும்.

நல்ல மனிதர் காணும் கனவு நுபுவ்வத்தில் 46ல் ஒரு பங்கு என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை சிலர் தமது எதிர்கால திட்டமிடலுக்காக தவறாக பயன்படுத்திக் கொள்வதுண்டு.

உதாரணத்திற்கு:

           தன்னிடம் ஏதோ ஒரு தெய்வீகத்தன்மை இருப்பதாக மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக  யாரோ ஒரு மஹான் தினந்தோறும் தமது கனவில் தோன்றி ஆசி வழங்குவதாக கனவில் காணாததைக் கண்டதாக மக்களிடம் பொய் கூறுவர்.  

           தான் விரும்பும் பெண்ணை மணமுடித்துக் கொள்வதற்காக அந்தப் பெண்ணை தொடர்ந்து தமது கனவில் காட்டப்படுவதாக அல்லது பெண்ணுடைய தாய் - தந்தை அல்லது நெருங்கிய உறவினர்களில் யாராவது ஒருவர் மரணித்திருந்தால் அவர் தமது கனவில் தோன்றி அப்பெண்ணை மணமுடித்துக் கொள்ளும்படி வற்புருத்துவதாகக் கூறுவர்.

           தாய் அல்லது தந்தை தனது வேறொரு சகோதரனுக்கு வஸியத் செய்த சொத்துக்களில் வருமாணம் ஈட்டும் (விளைச்சல்) நிலத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக தாய் அல்லது தந்தை தமது கனவில் தோன்றி உனக்குத் தான் இன்ன நிலத்தை தந்திருக்க வேண்டும் மாறாக உன் அண்ணனுக்கு கொடுத்தது தவறு என்று விடிய விடிய அழுது புலம்பியதாக அண்ணனிடம் கூறுவர். 

இப்படி பல வகைகளில் கனவில் காணாததைக் கண்டதாகக் கூறுவர். 

யாரும் யாருடைய உறக்கத்திற்குள் சென்று கனவுலகில் நீந்துவதை பார்க்க முடியாது என்றக் காரணத்தால் மனம் போன போக்கிற்கு விட்டடிப்பர்;.   

இதற்காகவே வராத கனவை வந்ததாகக் கூறுவதற்காக  இரவெல்லாம் விழித்திருந்து கற்பனை குதிரையின் கட்டுகளை அவிழ்த்து விட்டு வண்ண வண்ணமாக பொய் கனவை க்ரியேட் செய்து கொண்டே இருப்பர்.

அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்பதை மறந்து விட்டு அற்ப புகழுக்காக, அல்லது அகண்ட திட்டத்திற்காக கனவில் காணாததைக் கண்டதாகப் புளுகுவர். 

இது பல விளைவுகளையும், கொடிய தீமைகளையும் விளைவிக்கக் கூடிய பொய்யாகும்.  

இதை கேட்பவர் விபரமானவராக இருந்தால் கனவின் தரத்தையும், கூறுபவரின் தரத்தையும் பிரித்தறிந்து ஏற்றுக்கொள்வதை ஏற்றுக்கொள்வார், அலச்சியம் செய்வதை அலச்சியம் செய்து விடுவார்.

ஆனால் கேட்பவர் விபரம் கம்மியானவராக இருந்தால் கனவின் தரத்தையும், கூறுபவரின் தரத்தையும் விளங்கிக்கொள்ள முடியாமல் ஒரே அடியாய் கவிழ்ந்தே விடுவார்.

கனவு நுபுவ்வத்தின் ஒரு பகுதி.
கனவு நுபுவ்வத்தில் ஒரு பகுதி என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறி இருக்கின்றார்கள். அதனால் வல்ல அல்லாஹ் தனக்கு விருப்பமான அடியார்களுக்கு நன்மை – தீமைகளை அறிவிப்பதற்காக கனவுகள் மூலம் உள்ளுணர்வுகளை ஏற்படுத்துகிறான்.

நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி.6993

நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும். என்ற அறிவிப்பை முஸ்லீம்கள் நம்புவதால் அந்த நம்பிக்கையை புருடா மன்னர்கள் தாங்கள் விரும்பியதை சாதித்துக் கொள்வதற்காக மிஸ் யூஸ் பண்ணுகின்றனர்.

இணைவைப்புக்கு பாலம் அமைத்த பொய் கனவு.
நேற்று இரவு நான் ஒரு கனவு கண்டேன் அதில் பச்சை தலைப்பாகையுடன், வெள்ளை நிற பைஜாமாவுடன், கையில் தஸ்பீஸ் மணியுடன், முகத்தில் பிரகாசமான ஒளியுடன் ஒருவர் தோன்றி இன்ன இடத்தில் என்னை அடக்கம் செய்யப்பட்டுள்ளது, நான் இன்ன பகுதியிலிருந்து ( அதாவது அரேபியப் பகுதி அல்லது அடுத்த மாநிலங்கலிளிருந்து ) இஸ்லாத்தை பரப்புவதற்காக வந்தேன் வந்த இடத்தில் கொல்லப்பட்டேன் (அல்லது இயற்கை மரணம் அடைந்தேன்) என்னை புதைக்கப்பட்ட இடத்தில் கபுரை உயர்த்தி (தர்ஹா) கட்டினால் உன்னைப் பிடித்த முஸீபத்தையும், இந்த ஊர் மக்களைப் பிடித்த முஸீபத்தையும் நீக்குவேன் என்று கனவில் கூறியதாகக் கூறி விடாப்படியாக நின்று தர்ஹா கட்டி விட்டனர்.

தமிழகத்தின் தர்ஹாக்களில் அடங்கி இருப்பதாக கூறப்படும் அவுலியாக்களில் அதிகமானோர் அந்தந்த மன்னின் மைந்தர்கள் இல்லை. இருக்கவும் மாட்டார்கள், இருந்தால் மக்கள் இலகுவாக விசாரித்து அவரது தரத்தை புரிந்து கொண்டு விலகிக் கொள்ளலாம் என்றுக் கருதி அரேபிய நாட்டை அல்லது அடுத்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர். உதாரணத்திற்கு முஹைதீன் அப்துல் காதிர் ஜெய்லானி, நாகூர் சாகுல்ஹமீது பாஷா, ஏர்வாடி இப்ஹாஹீம் சாகிபு என்ற பட்டியல் நீளும்.  

கனவில் நடக்கும் மேஜர் ஆப்பரேஷன்.
இன்றும் மேல்படி தர்ஹாக்களில் நடைபெறுவதாக கூறப்படும் மராமத்து, கராமத்து வித்தைகள் அனைத்தும் கனவில் தான் நடக்கிறது, கனவுக்கு வெளியே நடப்பதில்லை.

ஹாட் ஆப்பரேஷன் தொடங்கி சாதாரண கட்டி ஆப்பரேஷன் வரை அனைத்து ஆப்பரேஷன்களும் அவுலியாக்களின் தர்ஹாக்களில் கனவில் தான் நடக்கும் அதுவும் கும்மிருட்டில் தான் நடக்கும். (நடந்ததாகக் கூறுவதற்கு சில கைத்தடிகள் அங்கேயே டேரா அடித்து தங்கி இருப்பார்கள் நான் இன்ன ஊரிலிலிருந்து வந்து சில நாட்களாக இங்கே தங்கினேன் பாவா கடந்த திங்கள்கிழமை என் கனவில் தோன்றி இந்த திங்கள் கிழமைக்கு தேதி அறிவித்து நேற்று இரவு ஒரு மணிக்கு கனவில் தோன்றி நல்ல மாதிரியாக ஆப்பரேஷன் செய்து விட்டார்கள் என்று புதிதாக வந்த அப்பாவிகளிடம் கூறுவர்), வேறொரு புதிய குரூப் வந்தால் அவர்களிடம் புளுக வேறொரு கைத் தடி தயாராகும்.   

ஏன் உங்கள் பாவா கனவில் தான் ஆப்பரேஷன் பண்ணுவாரா ? அதுவும் இரவு நேர கனவில் தான் பண்ணுவாரா என்று கேட்டால் ? 

கபுரில் அடங்கி இருப்பவர் இரவில் எழுந்து கனவில் தோன்றித் தான் ஆப்பரேஷன் செய்ய முடியும் ! கொஞ்சமாவது உங்களுக்கு காமன்சென்ஸ் இருந்தால் இதைப் புரிந்து கொள்வீர்கள் ?. தேவை இல்லாமல் மக்களை குழப்பாதீர்கள், அவுலியாக்களை அவமதிக்காதீர்கள் ?
என்று அவுலியா அபிமானிகள் சரவெடியாய் வெடித்து சிதறுவர்; ?.

இந்த சரவெடிக்கு சாதகமாக அமைந்தது நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்று என்ற அறிவிப்பை மிஸ் யூஸ் பண்ணுவது தான். 

அதனால் தான் காணாத கனவை கண்டதாகக் கூறாதீர்கள் என்று 14 நூற்றாண்டுகளுக்கு முன் சத்தியத்துடன் அனுப்பப்பட்ட (ஸல்) அவர்கள் கூறியதுடன் அது மாபெரும் பொய்களில் ஒன்று என்றுக் கூறி எச்சரிக்கை செய்தார்கள்.  

தம் கண் காணாத ஒன்றை (கனவை) அது கண்டதாகக் கூறுவது மாபெரும் பொய்களில் ஒன்றாகும். என்று என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி. 7043. 

இஸ்லாம் தடை செய்த காரியத்தை மனித சமுதாயம் தடுத்துக் கொண்டால் கண்டிப்பாக அதில் நன்மை இருக்கும், தடுக்காமல் விட்டு விட்டால் அது தீமையை விளைவிக்கும் என்பதற்கு படைத்து பரிபாலிக்கின்ற ரப்புல் ஆலமீனுக்கே இணைவைக்கும் பெரும் பாவத்திற்கு பாலம் அமைத்துக் கொடுத்தது இந்த பொய் கனவு தான்.

''அல்லாஹ்விடம் எந்தப் பாவம் மிகப் பெரியது?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது அதற்கு அவர்கள், 'அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணைவைப்பது தான்...என்றுக் கூறினார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்¥த்(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி 4761.

சமுதயாத்தில் பேசப்படும் ஒவ்வொரு பொய்யும் கண்டிப்பாக உலக – மறுமை வாழ்வுக்கு பெரும் இழப்பையே உருவாக்கும் ஒருக்காலும் நன்மையை விளைவிக்காது என்பதற்கு இன்னும் ஏராளமான சான்றுகள் உள்ளன. 



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக